| Main page Recent changes | Edit History | |
nun10 | ||
|---|---|---|
|
This revision is from 2016/06/09 07:07. You can Restore it. நம்மிடையே உள்ள நாயகர்கள்(Edit)செம்மல்(Edit)பொள்ளாசசியில் இருந்து கொழிஞ்சாம்பாறை செல்லும் சாலையில் உள்ள கோவிந்தனூர் என்னும் கிராமத்தை அடைந்தோம். சாலையிலேயே அமைந்திருக்கும் ஒரு வீட்டிலிருந்து நம் இம்மாத நாயகன் கண்ணன் வெளிவந்து நம்மை வரவேற்றார். சாலைக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்ததும் வீட்டின் முன் உள்ள சிறு இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட சிறார்கள், விளையாட்டுக்கே உரிய உற்சாகத்துடனும் ஓசையுடனும், கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள். அவர்களை நமக்கு அறிமுகப் படுத்தினார். யாவரும் அருகிலுள்ள வீடுகளில் வசிக்கும் குழந்தைகள். சுமார் ஏழு வயதிலிருந்து பதினான்கு வயது வரை இரு பாலாரும் இருந்தனர். நாம் வீட்டினுள் சென்று கண்ணனுடனும், அவர் மனைவி நித்யாவுடனும் உரையாட ஆரம்பித்தோம். இருவருமே மிக மென்மையாகப் பேசுகிறார்கள். அவர்கள் குடியிருக்கும் வீடு எளிமையான, ஓடுகள் வேய்ந்து முன் பகுதியில் தகரக்கூரை ஒற்றைச் சரிவாய் இறக்கப்பட்டுள்ளது. அவ்வீட்டைப் பற்றிக் கேட்டோம். தாம் அவ்வீட்டில் வாடகைக்குக் குடியிருப்பதாகக் கூறினர். வழக்கமாக நகரத்து வீடுகளைப் போல் வீட்டிற்குள் குழாய் மூலம் ஒடும் நீர் வசதி இல்லாதது. நித்யா அதைப்பற்றிக் கூறுகையில் நமக்குச் சற்றே சிரமம் எனினும் அது சூழலுக்கு இரட்டை நன்மை என்றார். மின்சாரப் பயன்பாடு குறைவதோடன்றி, சுமக்கும் இடரைக் குறைக்க நாம் தண்ணீரைக் கவனமாக கையாள்வோம். எனவே தண்ணீர் விரயம் குறையும் என்று விவரித்தார். கண்ணன் நம்மிடம் "வாருங்கள், இருட்டும் முன்னர் தோட்டத்தைக் காணலாம்." என்று அழைத்தார். கோவிந்தனூரிலிருந்து ஒரு மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேர்வக்காரன்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது திரு கண்ணன் குடும்பத்தினரின் தோட்டம். மூன்று ஏக்கர் பரப்புள்ள அத்தோப்பில், ஐந்து வயது முதல் நாற்பது வயது வரையுள்ள தென்னை மரங்கள் நல்ல பராமரிப்புடன் காட்சியளிக்கின்றன. மரவரிசைகளுக்கிடையே சிறு அகழி போன்ற நீட்டு வாக்கில் வெட்டப் பட்ட குழிகளில் (சுமார் இரண்டு அடி அகலம், மூன்றடி ஆழம்), பல விதமான பழ மர நாற்றுக்கள் வைக்கப்பட்டிருந்த்ன. மரங்கள் ஏதும் இல்லாமல் ஒரு சிறு வயல் பகுதியில்,தம் வீட்டிற்குத் தேவையான பயறு, பருப்பு வகைகள், கம்பு, ராகி ஆகியவை பயிரிடப்பட்டிருப்பதைக் கண்டோம். கண்ணன் அவ்வயலுக்கு கிணற்று நீர்ப்பாசனம் செய்யாமல், மானாவாரி வேளாண்மை முயற்சியை மேற்கொண்டுள்ளார். அவரும் நித்யாவும் தங்கள் குழந்தை மகிழ் மலருடன் தினமும் காலை தோட்டத்திற்கு வந்து விடுகிறார்கள். மாலை வரை அவர்களே தோட்டத்துப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். தேங்காய்கள் அறுவடை செய்யப்படுவதில்லை. மரத்திலிருந்து விழும் காய்களை சேகரித்து வைத்து பயன் படுத்திக் கொள்கிறார்கள். அவ்வாறு செய்தால் தென்னையில் காய்ப்பு குறைந்து விடுமோ என்ற நம் ஐயத்திற்கு, இல்லையென்று உறுதியளிக்க்கிறார். ஒரு சிறு பங்கை உடைத்து கொப்பரை செய்து, கோவிந்தனூரில் உள்ள செக்கில் அரைத்து, தம் பெற்றோர், உற்றார் நண்பர்களின் எண்ணெய் தேவைகளை நிறைவு செய்கிறார்கள். நாம் தோட்டத்தைச் சுற்றி நடக்கையில் ஒரு சிறு பொருள் வைக்கும் கிடங்கைத் தவிர எந்த விதமான கட்டமைப்பும் காணப்படவில்லை. மேலும் இத்துணை ஈடுபாட்டுடன் வேளாண்மைப் பணியில் ஈடுபடுபவர்கள் தோட்டத்திலேயே வசித்தால், இன்னும் நன்றாய் வேளாண்மையில் கவனம் செலுத்தலாமே என்ற எண்ணம் நமக்குத் தோன்றியது. கண்ணன் "நாங்கள் முதலில் நெடுஞ்சாலையில் வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்யும் போது அது தற்காலிக அமைப்பு என்றே எண்ணினோம். தோட்டத்தில் சுற்றுச் சூழலை மிகக் குறைவாக பாதிக்குமாறு ஒரு இயற்கை சார்ந்த வீட்டைக் கட்டி கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எங்கள் இருவருக்குமே இருந்தது. எனினும் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. எடுப்போமா என்பதும் ஐயமே" என்றார். அவரது விடை நமக்குப் புரியவில்லை. அவர் புன்னகையுடன் விளக்கலானார். " எங்கள் வாழ்க்கை கிராமத்திற்கு இட மாற்றம் என்பது ஒரு உறுதியான திட்டமிட்ட எண்ண ஓட்டத்தின் பயனாக நடந்தது. நாங்கள் இங்கு குடி பெயர்ந்ததும், விளையாடிக் கொண்டிருந்தார்களே, அக்குழந்தைகளே முதல் நண்பர்கள் ஆயினர். அவர்களுக்கு எங்களுடன் பழகும் வேளையில் கிடைத்த சுதந்திரமும், அதில் அவர்கள் கொண்ட உவகையும் எங்களை அவர்களிடம் மேலும் நெருக்கமாக்கி விட்டது. நாளடைவில் அவர்கள் எல்லோரும் எங்கள் பிள்ளைகள் போலவே ஆகி விட்டனர். அவர்கள் பெற்றோரும் தம் குழந்தைகள் எம்முடன் மாலை நேரம் செலவிடுவதை ஆதரிக்கின்றனர். இந்நிலையில் நாங்கள் தோட்டத்திற்கு முழு நேர இட மாற்றம் செய்தால், அச்சிறார்களால் மூன்று கிலோ மீட்டர் தினமும் வந்து போவது இயலாத காரியம். நாங்கள் வந்து செல்வது எளிது. எனவேதான் நான் அவ்வாறு கூறினேன்". மாலை மங்கத் துவங்கியதால், அவரது இல்லத்திற்குத் திரும்பினோம். விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் எல்லோரும் வீட்டினுள் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தனர். நித்யாவும் அவர்களுடன் அமர்ந்து தேவைப்படும் போது இடையிட்டு அவர்களை படிப்பில் வழி நடத்திக் கொண்டிருந்தார். பெண் மகிழ்மலர், நடக்கும் செயல்களை குழந்தைகளுக்கே உரிய விளையாட்டுத் தனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். நமக்கு அந்த நிகழ்வில் ஒரு எளிமை கலந்த அற்புதம் புலப்பட்டது. நித்யா எந்தக் குழந்தையையும் அதட்டவோ, ஆணையிடவோ இல்லை. சில பெரிய சிறுவர்கள் தம்மை விட சிறியவர்களுக்கு அவ்வப்போது உதவினார்கள், செய்யும் சிறு பிழைகளைத் திருத்தினார்கள். இது வழக்கமாய் வகுப்புகளில் நடக்கும் நெட்டுருப்போடும் படிப்பாக இல்லை. நித்யா அக்குழந்தைகள் தாம் படிக்கும் பாடங்களின் கருத்தை உள்வாங்கிக் கொள்கின்றனரா என்பதை ஒவ்வொரு படியிலும் உறுதி செய்து கொண்டே இருக்கிறார். இவ்விடத்தில் நமக்கு நம் இதழில் வெளி வந்த "கற்பதும் கசடும்" கட்டுரைகளுடன் இதை இணைத்து உணர முடிந்தது. நித்யா கண்ணன் தம் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பவில்லை. வீட்டிலும் திட்டமிட்டு பாடம் நடத்துவதில்லை. எனினும், அந்தப் பொருளாதாரத்தில் பின் தங்கிய குழந்தைகளின் பெற்றோர் இவ்வாறு முடிவெடுக்க இயலாது என்பதை நம் நாயகர் தம்பதிகள் உணர்ந்து, தம்மால் இயன்ற அளவுக்கு அந்த மந்தைக் கல்வியையும் செறிவு உள்ளதாகவும், அவர்களுக்கு வாழ்வில் பயனளிக்குமாறும் மாற்ற சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார்கள். நாம் அங்கிருந்த பொழுது, ஒரு சிறுவன் வந்து கண்ணன் அவர்களிடம் சற்றே பதட்டத்துடன், தன் பள்ளியில் பரிமாற்றச் சான்றிதழ் (Transfer Certificate) தர மறுப்பதாகக் கூறினான். கண்ணன் அவனிடம் பொறுமையாக, தேவையெனில் தாமே பள்ளிக்கு வந்து பள்ளி அலுவலர்களிடம் பேசுவதாகக் கூறினார். பிறகு நம்மிடம், "இந்தச் சிறுவன் மிகக் குறைந்த மதிப்பெண்களே பெற்று பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்கிறான். அவனுக்கு பொறிமுறைவேலை, இயந்திரப் பழுது நீக்கும் பணிகளில் இயல்பான ஈடுபாடும் திறமையும் உள்ளது. எனவே தான், நான் அவன் தந்தையிடம் இது பற்றி எடுத்துக் கூறி, அவனைத் தொழிற் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துமாறு ஆலோசனை தந்தேன்." என்று விளக்கினார். வெறும் வாய்ப்பேச்சுடன் விட்டு விடாமல், கண்ணன் அம்மாணவனையும், அவனது பெற்றோர்களையும் ஒரு தொழிற் பயிற்சிப் பள்ளிக்கு அழைத்து சென்று, அங்கிருக்கும் வகுப்புகள், அறிவியல்/தொழில் செயல்முறை பயிற்சிக் கூடங்கள் ஆகியவற்றை பார்வையிடச் செய்திருக்கிறார். தவிர அங்குள்ள பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் உரையாட வைத்திருக்கிறார். அதன் பின்னரே அவர்கள் கண்ணனின் யோசனையின் பொருளை உணர்ந்து, தம் மகன் தொழிற் பயிற்சி பெறுவதே சரியென்ற முடிவெடுத்திருக்கிறார்கள். அடுத்து நாம் மகிழ்மலர் பள்ளிக்கு செல்லாத்து பற்றி நித்யா அவர்களிடம் கேட்டோம். நித்யா, கண்ணன் இருவரின் பெற்றோரும் கோவை நகரத்தில் வசிப்பதாகக் கூறினார். "நாங்கள் மூவரும் ஒவ்வொரு வாரமும் கோவை நகரத்துக்கு செல்கிறோம். அங்கு மகிழ்மலர் திருமுறை, திருப்புகழ் போன்ற தமிழ்க் காவியங்களை இசையுடன் கற்றுக் கொள்கிறாள். அவள் தன்னார்வத்தினால் ஆராய்ந்து கற்றுக் கொள்வதே அவளுக்குக் கல்வியாய் உருவாகிறது. எதுவும் புகட்டப் பட வேண்டிய அவசியம் இல்லை. தாகத்திற்கு நீர் அருந்தக் குழந்தைகளுக்கு நாம் கற்று தரத் தேவையில்லை. அதே போல, அவர்கள் அறிய ஆவல் கொள்ளும் அறிவியலோ, கணக்கோ அவர்களே வாழ்வின் முறையில் தானாக அறிந்து கொள்வார்கள். ஏதேனும் உதவி தேவையென்று அவர்கள் எண்ணி நம்மை அணுகினால் மட்டுமே நம் தலையீடு தேவை." நித்யாவின் வேண்டுகோளுக்கிணங்கி, அங்கிருந்த எல்லாக் குழந்தைகளும், மகிழ்மலர் அவர்களுக்குக் கற்றுத் தந்த ஒரு குழந்தைப் பாடலை நமக்கு இனிமையாகப் பாடிக் காட்டினார்கள்.இன்னுமொரு சிறு வியப்பை வந்திருந்த சிறுவர்களிடமிருந்து பெற்றோம். நம் நாயகர் குடும்பம், அக்குழந்தைகளுக்கு செய்தித்தாள்களைக் கொண்டு காகிதப்பை செய்யும் பயிற்சி கொடுத்திருக்கிறார்கள். குழந்தைகள் அதை வெறும் ஒரு வேலையாக மட்டும் கருதாமல், காகித மறுபயன்பாட்டினால் நம் சுற்றுச் சூழல் மசுபடுவதை, எவ்வாறு குறைக்கிறோம் என்பதையும் அறிந்துள்ளார்கள். நித்யா அவர்கள் பல் மருத்துவப் படிப்பு படித்தவர். மருத்துவராக பெரு நகரங்களில் பணியாற்றியவர். அவர் இங்கு வந்ததும் அருகிலுள்ள அரசு சுகாதார நிலையத்துக்கு சென்று, அவர்களுக்கு பல் மருத்துவத்தில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னை அணுகுமாறு பதிவு செய்துள்ளார். தவிரவும், அவர் மருத்துவர் என்பதால், ஏதேனும் அவரச உதவி தேவையெனில், தம்மை அழைக்கவும் அறிவித்திருக்கிறார். இயற்கையை மிகவும் நேசிக்கும் இவர், தம் தோட்டத்திற்கு வரும் ஐம்பது வகையான பறவையினங்களைப் பற்றி இணைய தளத்தில் பதிவு செய்துள்ளார். கண்ணன் சென்னை அண்ணா பொறியியல் பல்கலைக்கழகக் கல்லூரியில், இளம் பொறியியல் பட்டம் பெற்றவர். அதன் பின், இந்தியாவின் தலை சிறந்த மனித வள மேம்பாட்டுக் கல்வி நிறுவனமான Xavier Labour Relations Institute ல், மனித வள மேம்பாட்டு துறையில் மேலாண்மை பட்டம் பெற்றவர். பல பன்னாட்டு வங்கிகள், மென்பொருள் நிறுவனங்களில் மேலான பதவிகளை வகித்தவர். அங்குள்ள இடைவிடாத அர்த்தமற்ற ஓட்டத்தின் வெறுமையை உணர்ந்து அவற்றையெல்லாம் உதறி விட்டு எளிமையான கிராமத்து வாழ்வின் நிம்மதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தமிழில், இலக்கியத்தில் தீவிர ஆர்வமுள்ளவர். திருக்குறளின் சிறப்பை அறிந்து, திருக்குறளை அடிப்படையாகக் கொண்ட ஒரு மேலாண்மைப் பயிற்சி வகுப்பை உருவாக்கியிருக்கிறார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார். தன் மேலாண்மை சிறப்பு அறிவை, கிராமத்துப் புதிய தலைமுறை மேம்பாட்டுக்காக, அமைதியாய் ஒரு அறப்பணியைத் துவங்கியுள்ளார். அவர் சீரிய எண்ணங்கள் சிறக்க வேண்டும் என்ற அவாவுடன் அவரிடம் இருந்து விடைபெற்று வந்தோம். தொடர்புக்கு கண்ணன் - 98401 77467; செம்மல் - 9994447252
|
||
| Powered by LionWiki. Last changed: 2016/06/10 03:52 Erase cookies | Edit History | |